Sunday, October 17, 2010

வெள்ளை நிறத்திலொரு விஷம்

சலனமற்று சுவர்பார்த்து
துயிலவே பிடிக்கிறது
சுவரில் தெரியும் காரையும்
வெள்ளையும் சித்திரமாக
விரிந்து தினம் கதை சொல்லி
தூங்கசெய்யும் சுகம் பிடித்ததால்

என்னை விழுங்கவரும்
முதலையாக ஒருநாள்

மேகத்தில மிதக்கும்
ராணியாக நானும் ஒருநாள்

நதியிலே கரை தேடி
மரக்கட்டையாக மாறிய நான்

வெள்ளைதவிர வேறு நிறம்
அன்னியமானது ...
சுவரின் வெள்ளை உதிரும்போது
கனவின் நிறமும் வெளிருமோ?
விஷமாக தூவும் வெள்ளை
சலனமற்று வெறிக்கிறது
சுவர்பார்த்து தூங்கும் என்னை ......

Thursday, October 14, 2010

உறக்கம் உதறி.....

இரவின் அழகிய இருட்டு 
வர்ணஜால கனவுகளை தூவுகிறது
கால்பற்றியிழுக்கும் உணர்வுகளை
முடிகோதி உள்ளிழுக்கும், 
பயப்போர்வை படரும் போது
கைநீட்டி தேடி அலைகிறேன்
மேலுதட்டில் துளிர்க்கும்
தேன்வியர்வையை மறந்து
திடுக்கிட்டு விழிக்கிறேன்
கருவண்ணம் பழகி கண் துழாவி
உற்று நோக்கும் போது
உள்ளிருந்து சிரிக்கிறாய்,  
உதறமுடியாமல் திரும்பவும்
உறங்கப்போகிறேன்.......

Friday, October 8, 2010

உடன்வா.............

குறுக்கு நெடுக்கான கோடுகளில்
வாழ்க்கை வாழச்சொல்கிறது 
நீளக்கோட்டில் முடிவைத்தேடி .
வளைவுகளில் திடுக்கிட்டு,
ஏற்றங்களில் மனமினித்தும்,
இறக்கங்களில் இரக்கமற்றும்
பாதையோர விமர்சனங்களால் 
வரையறுக்கப்பட்டு,
எதிரும் உடனும் வரவேற்றோ
விலகிச்சென்றோ
குழிகளுக்கு தப்பி
தாண்டி வாழ பழகுகிறேன்,

நீயும் உடன் வந்தால் ..........